மாதவிடாய் எமோஜிக்களுக்கு ஒப்புதல்: பெண்கள் அதிருப்தி
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் எமோஜி குறித்து தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள எமோஜிக்களை தினமும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எமோஜிக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் யுனிகோட் கான்சோர்டியாம் என்ற அமைப்பு தற்போது 230 புதிய எமோஜிக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு எமோஜி மாதவிடாய் குறித்த ஒரு எமோஜி ஆகும். ரத்தம் சொட்டும் வகையில் இந்த எமோஜி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பெண்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாதவிடாய் குறித்தான தயக்கத்தை உடைக்க இந்த எமோஜி உதவும் என யுனிகோட் கான்சோ தெரிவித்திருந்தபோதிலும், ரத்தம் சொட்டும் வகையில் உள்ள இந்த எமோஜியை வைத்து மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு பெரிதாக இருக்காது என்றும் மாதவிடாய் குறித்து இன்னும் கொஞ்சம் தெளிவான எமோஜிகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து ஒருசில மாதிரி எமோஜிக்களையும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த எமோஜிக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.