Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2015 (15:16 IST)
பாப் பாடகர் என்ரிக் கையில் பிராவைக் கொடுத்த பெண்; ஜனாதிபதி கோபம்
'இலங்கையின் கலாசாரத்தையும், இளம் தலைமுறையினரையும் பாதிக்கும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு' இனிவரும் காலங்களில் அனுமதியளிக்கப் போவதில்லை என்று நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புகழ்பெற்ற அமெரிக்க - ஸ்பானிய பாடகரான என்ரிக் இக்லேசியாஸின் இசை நிகழ்ச்சி இம்மாதம் 20 ஆம் திகதி கொழும்பில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற பெண்ணொருவர், என்ரிக் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது தனது பிராவை (மார்புக் கச்சை) கழற்றி அவரது கையில் கொடுப்பதாகக் காட்டும் வீடியோ காட்சி ஒன்று இணைய வலைத்தளங்களில் பரவிவருகின்றது.
இந்த சம்பவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையின்போது சுட்டிகாட்டிப் பேசியுள்ளார்.
'கொழும்பில் கடந்த வாரம் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரம் நடந்த அந்த நிகழ்ச்சிக்கான டிக்கட் ஐம்பதாயிரம் ரூபா வரையில் விற்கப்பட்டது. அங்கு பியர், பிராந்தி, ஜின், விஸ்கி என்று அனைத்தும் இளம் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை நீங்கள் வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள்' என்றார் மைத்திரிபால.
'இங்குள்ள சிறார்கள் மத்தியில் இதை கூறாமல் இருக்கவும் முடியாது. நிகழ்ச்சியை பார்க்கவந்த பெண்ணொருவர் தனது பிராவை அந்த பாடகரின் கையில் கொடுத்தார்' என்று கூறிய ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன, இவ்வாறான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.
'வெளிநாட்டவர்களை கொண்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உள்நாட்டில் அனுமதி பெற வேண்டும்...எமது திறமைகளையும் மனிதத் தன்மையையும் பணத்திற்காக விற்கமுடியாது. இதனால் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு இனிவரும் காலங்களில் நான் அனுமதி வழங்க மாட்டேன் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்' என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.