செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 பிப்ரவரி 2025 (08:42 IST)

டிரம்புக்கு நல்ல புத்தி தரணும்.. ஹனுமன் கோவிலில் வேண்டுதல் செய்யும் குஜராத் மக்கள்..!

Trump
அமெரிக்கா அதிபராக புதிதாக பொறுப்பேற்றுள்ள  டிரம்புக்கு நல்ல புத்தி தர வேண்டும் என அகமதாபாத்தில் உள்ள அனுமன் கோவிலில், அந்த பகுதியில் உள்ள மக்கள் பூஜை செய்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினர்களை கண்டுபிடித்து, அவர்களுடைய நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார் என்பதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தியாவுக்கும் கூட அமெரிக்காவிலிருந்து ஒரு விமானம் வந்தது, அதில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் இறக்கிவிடப்பட்டார்கள் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சம்ஸ்காரி ஹனுமான் கோயிலில் விசேஷ பூஜை நடைபெற்றதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நல்ல புத்தி தர வேண்டும், உடனடியாக இந்தியர்களுக்கு விசா கிடைக்க வேண்டும் என வேண்டுதல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்த பலர், கடந்த சில நாட்களாக இந்த கோயிலுக்கு அதிகமாக வருவதாக, கோயிலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக, இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால், விசா பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து, அதிகளவு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் இளைஞர்கள் அதிக அளவில் வருகை தந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்த பிரச்சினையும் இல்லாமல் விசா கிடைக்க வேண்டும் என அனுமனிடம் பக்தர்கள் வேண்டிக்கொள்ளும் நிலையில், அனுமன் அவர்களுக்கு அருள் பாலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva