பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பலி : தாய்லாந்தில் பரிதாபம்
தாய்லாந்து நாட்டில் செயல்பட்ட ஒரு தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பள்ளி மாணவிகள் உடல் கருகி பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விங்க்போடா மாவட்டத்தில் செயல்படும் அந்த பள்ளி, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பள்ளி இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்டது.
கீழ் அடுக்கில் கல்வி சாலையும், மேல் அடுக்கில் மாணவிகள் தங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் 3 வயது முதல் 13 வயது சிறுமிகள், அங்கேயே தங்கி கல்வி கற்று வந்தனர்.
நேற்று இரவு அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ இரண்டு மாடிகளிலும் பரவியதால், பள்ளி மாணவிகள் தீயில் சிக்கிக் கொண்டனர். தப்பிக்க வழியின்றி, மொத்தம் 17 மாணவிகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேலும், 5 மாணவிகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது பற்றி அவ்வூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான கட்டமைப்பு மற்றும் சரியான பாதுகாப்பு உபகரணஙகள் இல்லாததால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி தாய்லாந்தில் ஏற்படுகிறது எனத் தெரிகிறது.