கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் : முகத்தில் கரியை பூசி, மொட்டையடித்து ஊர்வலம்
வேறொரு ஆணுடன் ஓடிப்போன பெண்ணின் முகத்தில் கரி பூசி, அவரை மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற கொடூரம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
லாகூரில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகவல்பூரின் உச் செரீப் கிராமத்தில் கணவனுடன் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு, மற்றொரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர், அந்த வாலிபருடன் ஓடி விட்டார். சில நாட்கள் கழித்து அந்த பெண் அதே கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணை பார்த்த அவரது கணவர், தந்தை மற்றும் சித்தி ஆகியோர் அவரை அடித்து துன்புறுத்தி, கிராம பஞ்சாயத்திற்கு இழுத்து சென்றனர். அவரின் முகத்தில் கரி பூசி, மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து செல்ல வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி, அது நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு போலீஸ் அதிகார் “இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகள் அனைவரையும் விரைவில் கைது செய்வோம்” என்று கூறினார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.