வந்ததும் தெரியல.. போனதும் தெரியல..! – கொரோனாவை விரட்டிய வடகொரியா?
வடகொரியாவில் கடந்த மாதம் கொரோனா பாதிப்புகள் உறுதியான நிலையில் தற்போது அங்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதி வாக்கில் கொரோனா பரவத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் வடகொரியா மட்டும் தங்களது நாட்டில் கொரோனா ஏற்படவில்லை என தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் அங்கு ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.
வடகொரியாவிடம் கொரோனா பரிசோதனை கருவிகள், தடுப்பூசிகள் அவ்வளவாக கையிறுப்பு இல்லாத நிலையில் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என உலக நாடுகள் கவலையில் ஆழ்ந்தன. ஆனால் வடகொரியாவில் பாரம்பரிய வைத்தியம் மூலமாகவே பலருக்கும் கொரோனா குணப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த நிலையில் வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. விரைவில் அந்நாட்டு அரசு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.