இந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று அதிகாலை லம்பாக் என்ற தீவின் கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் பயத்தில் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 150க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.