வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (13:47 IST)

50 வருடங்களாக கடலில் மிதந்து வந்த கடிதம் – பதில் அனுப்பிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் 50 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று பாட்டிலுக்குள் மிதந்து வந்து சிறுவன் ஒருவன் கையில் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் டாலியா கடற்கரையில் எலியட் என்ற 9 வயது சிறுவன் மீன்பிடித்து கொண்டிருந்தான். அப்போது கரையில் பாட்டில் ஒன்று மண்ணில் புதைந்து கிடப்பதை பார்த்திருக்கிறான். அதை தோண்டி எடுத்தபோது அதற்குள் ஒரு கடிதம் இருந்திருக்கிறது.

ஆர்வமாக அந்த கடிதத்தை எடுத்து படித்திருக்கிறான் எலியட். அதில் “என் பெயர் பால் கில்மோர். எனக்கு 13 வயது ஆகிறது. நான் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பார்னுக்கு சென்று கொண்டிருக்கிறேன். நாங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து 1000 மைல்கள் தொலைவில் கடலில் இருக்கிறோம். இதை யாராவது படித்தால் எனக்கு பதில் அனுப்புங்கள்” என்று அந்த சிறுவன் மெல்பார்னில் வாழ்ந்த முகவரியும் அந்த கடிதத்தில் இருந்தது.

இந்த கடிதம் எழுதப்பட்டது நவம்பர் 17, 1969. 50 வருடங்கள் கழித்து இந்த கடிதம் எலியட்டுக்கு கிடைத்துள்ளது. உடனே அந்த முகவரிக்கு பதில் கடிதம் எழுதினான் எலியட். அந்த கடிதத்தை எழுதிய 13 வயது கில்மோர் தற்போது 63 வயது கிழவராக ஆகிவிட்டார். மீண்டும் அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்கு சென்று விட்டார்.

ஆனால் அவருடைய சகோதரியும், இளைய சகோதரரும் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். அவர்கள் இந்த பதில் கடிதத்தை பார்த்து வியந்தனர். உடனே அந்த பையனை தொடர்பு கொண்டு பேசினர். அந்த பழைய கடிதத்தை பார்த்த அவர்கள் அது தன் சகோதரன் எழுதியதுதான் என்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள். உடனே இதுகுறித்து லண்டனில் வசிக்கும் கில்மோருக்கும் தகவல் தெரிவித்தார்கள்.

50 வருடங்கள் கழித்து தன் கடலில் வீசிய கடிதம் கிடைத்த செய்தி அறிந்த கில்மோர் ஆச்சர்யம் அடைந்தார். இதுகுறித்து கில்மோரின் சகோதரி க்ராஸ்லேண்ட் கூறுகையில் “நாங்கள் அப்போது சிறு பிள்ளைகள். கில்மோர் கிடைக்கும் காலி பாட்டில்களில் கடிதம் எழுதி இதுபோல கடலில் வீசுவதை பழக்கமாக கொண்டிருந்தான். நாங்கள் லண்டனிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்குள் இதுபோல 5 பாட்டில்களில் எழுதி வெவ்வேறு கடல் பகுதிகளில் வீசியிருக்கிறான்” என கூறினார்.