இலங்கை சிறையில் இருந்து 30 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதுகுறித்து மீனவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 30 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் 30 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் வவுனியா சிறையில் உள்ள 8 மீனவர்களும் வரும் திங்கள் கிழமை விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அரசு இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.