1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (14:46 IST)

உலக சினிமா - Once Upon a Time in Anatolia

துருக்கியின்  முக்கிய இயக்குனரான நூரி பில்ஜே ஜெய்லான் இயக்கிய திரைப்படம், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் அனடோலியா. அனடோலியா என்பது துருக்கியின் ஒரு பகுதி. ஜெய்லானின் கதைவிவாதக்குழுவில் இடம்பெற்ற ஒரு மருத்துவருக்கு ஏற்பட்ட உண்மை அனுபவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.


 
 
இரவு நேரம் மலைப்பாங்கான பகுதியில் மூன்று வாகனங்கள் வருவதிலிருந்து இந்தப் படம் தொடங்குகிறது. அந்த வண்டிகளில் ஒரு மருத்துவர், ஒரு பிராசிக்கூட்டர், சில போலீஸ்காரர்கள், சில ராணுவ வீரர்கள், குழி தோண்டுகிறவர்கள் மற்றும் இரண்டு கொலை குற்றவாளிகள் என பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். குற்றவாளிகள் இருவரும் அண்ணன் தம்பிகள். தம்பி மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டவன்.
 
அவர்கள் அந்த மலைப்பகுதியில் எதையோ தேடுகிறார்கள். பிறகுதான் குற்றவாளிகள் கொன்று புதைத்த நபரின் சடலத்தை தேடுகிறார்கள் என்பது தெரிகிறது. இரவு நேரம் குடித்திருந்ததால் இருவருக்கும் புதைத்த இடம் தெரியவில்லை.
 
ஒவ்வொரு இடமாக தேடும் நேரத்தில் மருத்துவரும் பிராசிக்கூட்டரும் பேசிக் கொள்கிறார்கள். பிராசிக்கூட்டரின் நண்பரின் மனைவி ஒருநாள் திடீரென்று, சில மாதங்கள் கழித்து தான் இறந்து போவேன் என்று கூறியதாகவும், அதேபோல் சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் ஒரு குழந்தையை பிரசவித்தபின் இறந்து போனதாகவும் சொல்கிறார். அப்படி நடக்க சாத்தியமுண்டா என பிராசிக்கூட்டர் கேட்க, மருத்துவர், அந்த பெண்மணி யாருக்கும் தெரியாமல் விஷயம் சாப்பிட்டிருக்கலாம் என்கிறார்.
 
இந்த பயணத்தின் நடுவில் அடிக்கடி பிராசிக்கூட்டர் இந்தக் கதையை மருத்துவரிடம் சொல்கிறார். பிரேதப்பரிசோதனை செய்திருந்தால் அந்தப் பெண் இறந்ததுக்கான காரணம் தெரிந்திருக்கலாம் என்கிறார் மருத்துவர். ஆனால், அந்தப் பெண் இயற்கையாகத்தான் இறந்தாள் என்பதில் பிராசிக்கூட்டர் பிடிவாதமாக இருக்கிறார்.
 
இரவு அவர்கள் ஒரு கிராமத்தின் மேயரின் வீட்டில் தங்கியிருக்கும் போது, குற்றவாளிகளில் ஒருவன், இறந்து போனவனின் 12 வயது மகன் தனது மகன் என்கிறான். இறந்து போனவனின் மனைவிக்கும் அவனுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. 
 
குற்றவாளிகளும், இறந்து போன நபரும் சேர்ந்து குடிக்கும் போது இந்த உண்மை வெளியேவர, அப்போது ஏற்பட்ட சண்டையில்தான் கொலை நடந்திருக்கிறது.
 
மறுநாள் காலை பிணத்தை கண்டுபிடிக்கிறார்கள். பிரேதப் பரிசோதனை நடக்கிறது. அப்போது பிராசிக்கூட்டர் மருத்துவரிடம் மீண்டும் தனது நண்பரின் மனைவியின் கதையை எடுக்கிறார். மாரடைப்பை தூண்டும் சில மருந்துகள் இருக்கின்றன என்று சொன்னீர்களே அது என்ன என்று அவர் கேட்க, மருத்துவர் சொல்ல ஆரம்பிக்கிறார். அதில் ஒரு மருந்தை தனது மாமனார் எடுத்துக் கொள்வதுண்டு என்று பிராசிக்கூட்டர் அதிர்ச்சியும் சோகமுமாக கூறுகிறார். அவரது பேச்சிலிருந்து இறந்து போனது அவரது நண்பரின் மனைவியல்ல, அவரது சொந்த மனைவி என்பது நமக்கு தெரிய வருகிறது.
 
இந்த கதையினூடாக ஜெய்லான் மனிதர்களின் குற்றவுணர்வு அவர்களை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதையும், துருக்கியின் கிராமப்புறங்கள் இன்னும் வளர்ச்சியடையாமல் தேங்கியிருப்பதையும் நுட்பமாக காட்சிப்படுத்தியுள்ளார்.
 
சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்ற சிறப்பான திரைப்படம் இது.