செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
Written By Sasikala

காரியத்தடைகள் யாவும் நீக்கும் கணபதி வழிபாடு !!

வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம். 


 
எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை எதுவும் நெருங்காது.
 
முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.
 
விநாயகரை அருகம்புல் கொண்டு கேதுவின் அஷ்வினி, மகம் மற்றும் மூலம் ஆகிய நாட்களில் வணங்கிவர குழப்பங்களும் பய உணர்வும் நீங்கும்.
ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். 
 
தான் என்ற அகங்கரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே எளிமையான அருகம்புல்லை விரும்பி ஏற்கிறார் விநாயகர். மனம், வாக்கு, உடல் மூன்றையும் கூர்மைப்படுத்தி இறையருளை பெற வேண்டும் என்பதை காட்டவே அருகம்புல் ஒரே காம்பில் மூன்று முனைகளைக் கொண்டதாக இருக்கிறது.
 
அதே போல அர்க்க புஷ்பம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர். சூரியனுக்கு அர்க்கன் என்று பெயருண்டு. சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும் உண்டாகும்.