1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஸ்வர்ண கௌரி விரத மஹிமையும் பலன்களும் !!

ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும். இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது.


கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படுவதாகிய கௌரி விரதங்களின் முக்கியத்துவம் இதில் மறைபொருளாகப் புலப்படும்.
 
ஒரு முறை, கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதக் காரணம் பற்றி வினவ, அவரும் பின் வருமாறு அருளிச் செய்தார். முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.
 
ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு தடாக(குள)க் கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, 'இந்த விரதம் யாது?, அதன் பலன் என்ன?' என்று கேட்டான். அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும்' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறையையும் சொன்னார்கள்.
 
அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு  விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.
 
முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது  விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது.
 
இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே, கணவனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.
 
முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டி வந்த காரணத்தினால், அப்போது, கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், ஆனந்தக் கண்ணீர் பெருக, மனம் உருக, தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சௌபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள்.
 
அங்கு தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், சகல சுகங்களையும் முன் போல் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள். எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும்.