விநாயகருக்கு உகந்த அருகம்புல் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!
அருகம்புல் வழிபாடு என்பது அல்லல்கள் தீர்க்கும் வழிபாடு. தூர்வா என்றால் அறுகம்புல். யுக்மம் என்றால் இரட்டை என்று பொருள். பொதுவாக அர்ச்சனையின் போது நாம் அருகம்புல்லை சாத்துவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி அன்று அறுகம்புல் கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் அற்புத பலன்களைப் பெறலாம். இரண்டு இரண்டாக அறுகம்புற்களை எடுத்து கணநாதனின் நாமத்தைச் சொல்லி சாத்த வேண்டும். இதனால் நினைத்தது நிறைவேறும்.
அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.
அருகம்புல்லுக்கு ஈடானது எதுவும் இல்லை. தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது அருகம்புல் என்று அந்த குபேரரே கூறியுள்ளார். பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தம் அருகம்புல்லின் மீது விழுந்ததால் அதற்கு அழிவென்பதே கிடையாது. பூஜைக்கு உரிய இந்த புல்லிற்கு ஆகர்ஷன சக்தியை உறிஞ்சும் தன்மை உண்டு. நல்ல சக்தியை தேக்கி வைத்து தீய சக்தியை விலக்கி வைக்கும் தன்மை கொண்டது அருகம்புல்.
யாஷினி தேவி என்ற தேவ மங்கை விநாயகரை திருமணம் செய்ய நினைத்து தவம் இருந்தாள். ஆனால் அதற்கு சம்மதிக்காத விநாயகர் அருகம்புல்லாக மாறி தனக்கு விருப்பமான பொருளாக தன்னுடனேயே இரு என்று வரமளித்தார் என்கிறது புராண கதை.
பார்வதியும் சிவனும் தாயம் விளையாடிய போது நடுவராக இருந்த நந்தி சிவனுக்கு ஆதரவாக கூறியதால் கோபம் கொண்ட பார்வதி தேவி, நந்திக்கு சாபம் கொடுத்தார். பின்னர் அவரே சாப விமோசனமும் கொடுத்தார். கணேச சதுர்த்தியின் போது விநாயகருக்கு விருப்பமான பொருளை சமர்பித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறவே அருகம்புல்லை படைத்து சாப விமோசனம் பெற்றாராம்.
கணபதிக்கு ஆள் உயர மாலை வேண்டாம். ஒரு கைப்பிடி அருகம்புல் போதும். அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நன்மை தரும்.