உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் நீராடும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ப்ரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வரும் நிலையில் நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திரிவேணி சங்கமத்தில் ஆண்கள், பெண்கள் நீராட தனித்தனி இடங்களும், உடைமாற்றும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் கும்பமேளாவில் பெண்கள் நீராடும்போதும், உடை மாற்றும்போதும் சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து டெலிகிராம் உள்ளிட்டவற்றில் ஆயிரங்களில் விலை சொல்லி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுத்தொடர்பாக இந்தியா டுடே ஊடகம் நடத்திய உண்மை சரிபார்ப்பில், அதில் சில வீடியோக்கள் பெண்கள் நீராடும்போது எடுக்கப்பட்டதாக உள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அவை எங்கெங்கோ எடுக்கப்பட்டு கும்பமேளா வீடியோ என்று பரப்பப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும் பல சம்பந்தமற்ற ஆபாச வீடியோக்களும் இதுபோன்ற சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புனித நீராடும் இடங்களிலும் இதுபோன்ற மோசமான செயல்களை செய்பவர்கள் மீதும், பகிர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K