ஹீரோக்கள்தான் வேற… கத அதேதான் – சந்தேகத்தில் ரசிகர்கள்!
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் கிராமத்து கதை என்பது உறுதியாகியுள்ளது.
சூர்யா நடிக்கவிருக்கும் 40வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக டாக்டர் படத்தின் நாயகி பிரியங்கா மோஹன் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்துக்கு இமான் முதல்முறையாக இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கும் பாண்டிராஜ் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க உள்ளாராம். இந்த படம் சுதந்திர தினம் அல்லது ஆயுத பூஜை ஆகிய நாட்களில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படமும் கிராமத்துக் கதை என்றும் பாண்டிராஜின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து எடுத்த நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய இரண்டு படங்களுக்கும் பெரிதாக எந்த கதையமைப்பில் வித்தியாசம் இருக்காது. இப்போது சூர்யாவை வைத்து எடுக்கும் படமாவது ஏதாவது வித்தியாசமாக இருக்குமா அல்லது அதே கதையில் மற்றொரு ஹீரோவான சூர்யாவை நடிக்க வைக்க உள்ளாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.