டைம் லூப் படம்னு என்கிட்ட யாருமே சொல்லல…. புலம்பிய ரசிகருக்கு வெங்கட்பிரபுவின் பதில்!
கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் வசூலையும் குவித்தது.
மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.
இப்படி எல்லாவிதத்திலும் வெற்றி பெற்ற மாநாடு திரைப்படம், முதல் முதலாக ஒரு ரசிகரிடம் இருந்து நெகட்டிவ் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி தன் பக்கத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில் எனக்கு இதுவரை வந்த படங்களிலேயே பிடிக்காத படம் மாநாடுதான். ஏனென்றால் எனக்கு படம் புரியவில்லை. வந்த காட்சிகளிலே திரும்ப திரும்ப வந்து எரிச்சலூட்டுகிறது. என்னிடம் இது டைம் லூப் படம் என்று சொல்லவில்லை என வெகுளியாக பேசியிருந்தார்.
அந்த வீடியோவுக்கு பதிலளித்த வெங்கட்பிரபு எல்லா விமர்சனங்களையும் நாம் நல்லவிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் பிரேம். நல்லதோ கெட்டதோ… நாம் பாக்காத விமர்சனமா?. அடுத்த படம் இவருக்கும் பிடிக்கும் மாதிரி எடுப்போம். எனக் கூறியுள்ளார்.