திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (08:32 IST)

ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது.. உதயம் தியேட்டர் மூடலுக்கு வருத்தம் தெரிவித்த வைரமுத்து..!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த உதயம் தியேட்டர் மூடப்பட்டு விட்டதாகவும் அந்த பகுதியில் விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளதாகவும் கூறப்படுவதை அடுத்து திரையுலகம் வருத்தம் தெரிவித்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தனது சமூக வலைதளத்தில் இது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். 
 
உதயம் , மினி உதயம், சூரியன் மற்றும் சந்திரன் என நான்கு ஸ்கிரீன்கள் இருந்த உதயம் தியேட்டர் என்பது சென்னை அசோக் நகரில் கம்பீரமாக இருந்தது. இந்த தியேட்டரில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகின என்பதும் இந்த தியேட்டரில் தான் பல உதவி இயக்குனர்கள் உருவாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக தியேட்டருக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் தியேட்டரை ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாக கூறப்படுவதால் சினிமா ரசிகர்கள் கடும் வருத்தம் அடைந்துள்ளனர். இது குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:
 
ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது
 
முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
 
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது
 
இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்
 
நன்றி உதயம்
 
Edited by Siva