அஜித்துக்கு எதிராக அணி திரளும் சினிமாக்காரர்கள்
அஜித்தின் சமீபத்திய நடவடிக்கைகளால் கடுப்பில் இருக்கும் சினிமாக்காரர்கள், அவருக்கு எதிராக அணி திரள்வதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சினிமா துறையில் என்ன பிரச்னை நடந்தாலும், ‘அவ்வளவு சத்தமாவா கேட்குது?’ என்கிற ரீதியில் காதை மூடியே வைத்திருக்கிறார் அஜித். பிரச்னைகளுக்கு மட்டுமல்ல, கொண்டாட்டங்களுக்கும் அதே ரியாக்ஷன்தான். ஜி.எஸ்.டி., தியேட்டர் ஸ்டிரைக், பெப்சி பிரச்னை என எது குறித்துமே வாய் திறக்காத மெளனச் சாமியராகி விட்டார் அஜித்.
அதெல்லாம் கூட சரி. தன் படத்தின் புரமோஷன்களில் கூட கலந்து கொள்ளாததில் என்ன நியாயமோ, தர்மமோ..? நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களின் பொறுப்புக்கு வந்ததில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விஷால், அஜித்துக்காகவே தனி ஆப்பை செதுக்கிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். புரமோஷனுக்கு வராத நடிகர், நடிகைகளின் படங்களை ரிலீஸ் செய்யக்கூடாது என்பதுதான் அது.
இன்னொரு பக்கம், சினிமா சார்ந்த மற்றும் சினிமாக்காரர்கள் சார்ந்த எந்த நல்லது, கெட்டதுகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது. அத்திப்பூத்தாற் போல எப்போதாவது அவர் மனைவி ஷாலினி ஏதாவது ஒரு ஃபங்க்ஷனில் தலைகாட்டுவார். இது, சினிமாக்காரர்களிடையே பெரும் மனக்கஷ்டத்தை உருவாக்கி இருக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ படத்துக்கு, ஒரு டிக்கெட் விலை 1500 ரூபாய்க்கு கூட விற்கப்பட்டது. அந்தத் தொகையைக் கொடுத்தும் பல ரசிகர்கள் வாங்கிச் சென்றனர். ஆனால், இதுகுறித்து கூட வாய் திறக்கவில்லை அஜித். அத்துடன், ‘விவேகம்’ படத்துக்கு எதிர்மறை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனை அவருடைய ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் திட்டி வருகின்றனர். ஆனால், பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட சிலர் ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கமல் மற்றும் விஜய் போல ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாகக் கூட மாற்றாமல், மொத்தமாகக் கலைத்துவிட்டது ரசிகர்களையும் வருத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் தங்கள் வழக்கமான கடமைகளைச் செய்து வருகின்றனர்.
இப்படி பல விஷயங்கள் அஜித்துக்கு எதிராக வரிசைகட்டி நிற்கின்றன. அதுவும் அடுத்தடுத்து சிவாவுக்கு படம் இயக்கும் வாய்ப்புகளைத் தருவதால், தனக்கு கால்ஷீட் தருவார் என்று நம்பி ஏமாந்த இயக்குநர்களும் அஜித்துக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஓரணியாகத் திரண்டு, விரைவில் அஜித்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள்.