படக்குழுவினருக்கு 100 ஸ்மார்ட் போன்கள் இலவசம் – சோனு சூட்டுவின் அடுத்த உதவி!
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். கடந்த 6 மாதங்களாக அவர் செய்த சேவையால் சினிமா நடிகர்கள் மத்தியிலேயே கூட அவருக்கு மரியாதை அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்கள் மூலமாக தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு எல்லாம் செய்துகொடுத்து வருகிறார் சோனு சூட்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த அவரை அம்மாநிலத்தின் அடையாளமாக ஐகானாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்நிலையில் சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக தனது 8 சொத்துகளை வங்கிகளில் 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார் என்ற செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அவருக்கு மேலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இப்போது அவர் சிரஞ்சீவி நடித்துவரும் ஆச்சார்யா படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் பணிபுரியும் கலைஞர்களில் பின் தங்கியவர்களுக்கு குழந்தைகளின் கல்விக்காக 100 ஸ்மார்ட் போன்களை இலவசமாக வழங்கியுள்ளார்.