செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 18 டிசம்பர் 2024 (14:10 IST)

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி சமன் செய்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தபோது அதிர்ச்சி செய்தியாக அஸ்வின் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.  குறைந்த பட்சம் இந்த தொடரை முடித்துவிட்டாவது அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம் என ரசிகர்கள் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின். இந்திய அணிக்காக அதிக தொடர் நாயகன் விருதை வென்றவர் என்ற பெருமைக்குரியவர் அஸ்வின்.

தோனியின் தலைமையின் கீழ் தனது சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார் அஸ்வின். தோனியைப் போலவே ஆஸ்திரேலியா தொடரில், தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவித்து வெளியேறியுள்ளார்.  இருவருக்குமே ஃபேர்வெல் போட்டி நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேசப் போட்டியில் ஓய்வறித்திருக்கும் அஸ்வின் இனிமேல் உள்ளூர் மற்றும் க்ளப் போட்டிகளில் ஆர்வம் காட்டவுள்ளதாக சொல்லப்படுகிறது.