2.0 படப்பிடிப்பில் செய்தியாளர் மீது தாக்குதல்; வருத்தம் தெரிவித்த ஷங்கர்
2.0 படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடைப்பெற்றது. இந்த படப்பிடிப்பில் வாகனங்கள் ஏராளமாக நின்றதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்துள்ளது.
இதைப்பார்த்த செய்தியாளர் ஒருவர் அதை புகைப்படம் எடுத்துள்ளார். அதற்கு படக்குழுவினர் அந்த செய்தியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் செய்தியாளர் தரப்பில் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஷங்கரின் உறவினர் பப்புவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து இயக்குநர் ஷங்கர் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:-
இந்த சம்பவம் எனக்கு தெரியாமல் நடைப்பெற்றுள்ளது. இதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என படக்குழுவினரிடம் கூறுவது உண்டு. இனி இதுபோன்ற சம்பவம் நடைப்பெறாது என கூறினார்.
ஷங்கர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து செய்தியாளர்கள் சார்ப்பில் அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் எங்களுக்கு யாரையும் கைது செய்து சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.