வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (19:24 IST)

ரஜினியின் சொத்து வரி சர்ச்சை… இதுக்குள் இவ்வளவு இருக்கா?

ரஜினி தனது ராகவேந்திரா மண்டபத்துக்கு சொத்து வரியை ரத்து செய்ய சொல்லி நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில் அது சம்மந்தமாக ஷாஜகன் என்பவரின் முகநூல் பதிவு.

லாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.பொச்சில் எச்சில் துப்பி உதைத்து அனுப்பாத குறையாக, இத்தோட ஓடிப்போயிடு... இல்லேன்னா பைன் போட்டுடுவேன் என்று நீதிமன்றம் விரட்டி விட்டது. இது எல்லாருக்கும் தெரிந்த கதை.

அவர் கேட்டதில் என்ன தவறு? ஆம்னி பஸ்காரர்களும்கூட வரி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே? ரஜனிக்கு சொத்துவரி தள்ளுபடி அல்லது சலுகை கொடுத்தால், அது மற்ற எல்லாருக்கும்கூட தள்ளுபடி கிடைக்க பயன் தருமே?இப்படியெல்லாம் சில கேள்விகள்.
கேள்வி கேட்பவர்களில் பலர் அப்பாவிகள். சிலர் குழப்பவாதிகள்.
அது இருக்கட்டும்.

இந்த வாதம் ஏன் செல்லாது என்பதை எளிமையான மொழியில் பார்ப்போம்.
சொத்துவரி என்பது வேறு, வருமான வரி அல்லது சேவை வரி என்பது வேறு.
கல்யாண மண்டபம் வாடகைக்கு விடப்படுகிறது. அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானத்துக்கு வரி செலுத்தப்பட வேண்டும். லாக்டவுன் காரணமாக வருமானமே இல்லை என்றால், வருமான வரி கிடையாது.
கல்யாண மண்டபம் ஒரு சேவை வழங்குகிறது. அந்த சேவைக்கு கட்டணம் கிடைக்கிறது. அதற்கு சேவை வரி செலுத்தலாம். லாக் டவுன் காரணமாக சேவையே வழங்கப்படவில்லை, எனவே வருவாய் இல்லை, எனவே சேவை வரி செலுத்தத் தேவையில்லை.

ஆனால் சொத்து வரி என்பது அப்படியல்ல. சொத்தின் வருவாய் எவ்வளவு கிடைக்கக்கூடும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில்தான் சொத்துவரி போடப்படுகிறது என்றாலும், சொத்து என்பது நிலையானது. வருவாயே இல்லாவிட்டாலும் சொத்துவரி உண்டு.

உதாரணமாக, எனக்கு ஒரு வீடு இருக்கிறது. அதில் நான் குடியிருக்கிறேன், அல்லது வாடகைக்கு விட்டிருக்கிறேன், அல்லது பூட்டியே வைத்திருக்கிறேன். எப்படி வைத்திருந்தாலும் அதற்கு சொத்து வரி உண்டு. ஏனென்றால், சொத்துவரியைக் கொண்டுதான், அந்தப் பகுதிக்கான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட குடிமை வசதிகள் தரப்படுகின்றன. உங்கள் வீட்டில் நீங்கள் குடியிருந்தாலும் சரி, வாடகைக்கு விட்டிருந்தாலும் சரி, சும்மா பூட்டி வைத்திருந்தாலும் சரி, அந்தப் பகுதிக்கு இந்தச் சேவைகள் எல்லாம் கிடைத்தாக வேண்டும். எந்தெந்த வீட்டில் ஆள் இல்லை, எந்தெந்த வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள் என்று பார்த்துப் பார்த்து, பயன்படுத்தப்படும் காலத்துக்கு மட்டும் சொத்து வரி விதிக்க முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால், நம் மக்கள் அதிலும் பெரிய வேலையைக் காட்டி விடுவார்கள். வரிக்கணக்கு எடுக்க வரும்போது வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு, இங்கே யாரும் இல்லை, அதனால் சொத்துவரி கூடாது என்று சொல்லி விடுவார்கள். சரிதானே?

வருவாய் இருந்தால்தான் சொத்துவரி கட்டுவேன் என்றால், சில மாதங்களில் ஏகத்துக்கு புக்கிங் ஆகி, செம்மையாக கல்லா கட்டும்போது கூடுதலாக சொத்துவரி கட்டுகிறாரா? இல்லைதானே?
 

அதனால்தான் சொத்துவரி என்பது, அந்தந்தப் பகுதியின் மனை விலை மதிப்பு, கட்டுமானம், அதன் வருவாய் ஆகிய பல விஷயங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது. அதற்கென்று ஒரு சூத்திரம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் கூகுளில் தேடிப் பார்க்கலாம்.
------------------------------------------------------------------
இப்போது அடுத்த விஷயத்துக்கு வருவோம்.

ரஜனியின் கல்யாண மண்டபத்துக்கான சொத்து வரி பாக்கி எவ்வளவு என்று ஒரு படத்தைப் பார்த்தேன். உடனே மேலும் தோண்டிப் பார்த்தேன். நிறைய கேள்விகள் எழுகின்றன.

1. நான் அறிந்தவரையில், ரஜனியின் கல்யாண மண்டபம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எப்போதிருந்து என்று தெரியாது. ஆனால், சொத்துவரி நோட்டீசின் அடிப்படையில் பார்த்தால், 2018இல்தான் கட்டப்பட்டது என்று காட்டுகிறது. இது மிகப்பெரிய வியப்பளிக்கும் செய்தி.

2. சொத்துவரி நோட்டீசின் கணக்குப்படி, அதன் பில்ட்-அப் ஏரியா என்பது கிரவுண்ட் ஃப்ளோர் 250 சதுர அடி. அதாவது, சுமாராக வெறும் 15 அடி x 17 அடி அகலக் கட்டிடம்தான்! இது வியப்பளிப்பது மட்டுமல்ல, அதிர்ச்சி தருவதும்கூட.

3. இதுவரை ரஜனியின் கல்யாண மண்டபத்துக்கு செலுத்திய சொத்துவரி எவ்வளவு, எப்போது எவ்வளவு வரியாக செலுத்தப்பட்டது என்று பார்த்தேன். 2020 வரை கச்சிதமாக, ஒருமுறைகூட தவறாமல், ஃபைன் ஏதும் இல்லாமல் செலுத்தி வந்திருக்கிறார்கள். சுமார் 25 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட வரி 1 கோடி ரூபாய்.

1993-94 முதல் 98 வரை - 6 மாதங்களுக்கு 66,422 ரூபாய்
1998-99இல் 2006 வரை - 6 மாதங்களுக்கு 97,871 ரூபாய்
2006-07 முதல் 2018 வரை - 6 மாதங்களுக்கு 2,31,397
2018-19 முதல் 2021 வரை - 6 மாதங்களுக்கு 6,49850.
மேற்கண்ட விவரங்களைப் படிக்கும்போது, சொத்துவரி விகிதம் உயர்ந்து விட்டதாக யாரும் நினைத்து விட வேண்டாம்.

இதைத் தோண்டப்போகத் தெரிய வந்த இன்னொரு விஷயம் - சென்னையின் சொத்துவரி விகிதம் கடைசியாக முடிவு செய்யப்பட்டது 1998இல். கடந்த இருபது ஆண்டுகளில் சொத்துவரி அதிகரிக்கப்படவே இல்லை! சொத்துவரியை அதிகரிப்பது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் 2017இலேயே கண்டித்து, விரைவாக நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால் இதுவரை ஏதும் நடைபெறவில்லை.

1993இல் பயன்பாடு குறைவாக இருந்ததால் 66 ஆயிரமாக வரி இருந்திருக்கலாம். பயன்பாடு அதிகமானதால் 2018இல் 6 லட்சமாக உயர்ந்திருக்கலாம்.சொத்துவரி இரண்டு தவணைகளுக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போதைய சொத்துவரி பாக்கி 6,49,000 அல்ல. 12,95,000.(இதில், கடைசியாகச் சொன்ன 649850 ரூபாய் என்பதில் எதற்கோ 5000 ரூபாய் தள்ளுபடியும் கிடைத்திருக்கிறது. )
மேலே சொன்ன மூன்று விஷயங்களையும் வைத்துப் பார்த்தால், கல்யாண மண்டபத்துக்கு சொத்துவரியைக் குறைப்பதற்காகவே கட்டிடப் பரப்பைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. கல்யாண மண்டபத்தின் ஒரு படம் மட்டும் கீழே தந்திருக்கிறேன்.

ஒன்று, இவ்வளவு பெரிய கட்டிடத்தை வெறும் 250 சதுர அடியில் கட்டும் தொழில்நுட்பத்தை செயலாக்கிய ரஜனிக்கும் சென்னை மாநகராட்சியில் சிலருக்கும் சேர்த்து விருதளித்துப் பெருமைப்படுத்த வேண்டும்.
அல்லது, இதில் இன்னும் எவ்வளவு ஊழல் என்று ஆராய வேண்டும்.
அல்லது, நோட்டீசில் தவறு நேர்ந்து விட்டது என்று மாநகராட்சி நிரூபிக்க வேண்டும்.

இப்போது சொல்லுங்கள், சிஸ்டம் சரியில்லைதானே?!