2.0 படத்தை 800 கோடிக்காக விற்பதற்காக அரசியல் அறிவிப்பு – ரஜினி மீது ரசிகர் புகார்!
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் ரஜினி மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் எனக் கூறி இன்ப அதிர்ச்சி அளித்தார். இதனால் மற்ற கட்சிகளில் பொறுப்புகளில் இருந்த ரஜினி ரசிகர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தனர். ஆனால் ரஜினி இப்போது தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. குமரி மாவட்ட துணை செயலர் ஆர்.எஸ்.ராஜன் உள்ளிட்ட சிலர் மன்றத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி நீக்கப்பட்டனர். இந்நிலையில் ராஜன் இப்போது ரஜினி மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் 1986ல் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன். ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியானதால் காங்கிரஸில் வகித்த பதவியை ராஜினாமே செய்து மன்றத்தில் இணைந்தேன். எந்திரன் படத்தை, 800 கோடி ரூபாய்க்கு விற்க, அவர் காட்டிய தந்திரம்தான் அரசியல் கட்சி துவக்கம் என்ற அறிவிப்பு. அவர் என்னை மட்டும் ஏமாற்றவில்லை. ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளார். எனக் கூறியுள்ளார்.