செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:23 IST)

ரெய்டு மிகவும் தரங்கெட்ட செயல்; மெர்சலுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் அருள்தாஸ்

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இப்படம் சுசீந்திரன் இயக்கத்தில் 'மாநகரம்' சந்தீப், விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ் மத்திய  அரசையும், பா.ஜ.கவினர் மற்றும் திரையுலகினரை ஒடுக்க நினைப்பவர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

 
"ஜாதி, மதம் ஆகியவை இல்லாத துறை சினிமாத்துறை. 'மெர்சல்' படத்தில் விஜய் பேசின வசனங்களுக்காக அவர் மதத்தையும்  இழுத்து ட்விட்டர்ல போடுற அளவுக்கு கேவலமான முறையைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.  அவர்களுக்கு விஷால் ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கிறார். அடுத்த நாள் அவர் வீட்டில் ஒரு ரெய்டு நடக்குது. விஜய்யோட தனிப்பட்ட அடையாள அட்டையை பொதுவெளியில் போடுறாங்க. அவங்க அடையாள அட்டையை இப்படிப் போடுவாங்களா இதை சினிமாவை நசுக்குற முயற்சியாக நான் பார்க்கிறேன்.
 
சினிமாத்துறையில்தான் வரி கட்டுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உலகிலேயே அதிக ஜி.எஸ்.டி வாங்குவது நனது  நாட்டில்தான். அந்தக் கருத்தை 'மெர்சல்' படத்தில் பதிவு பண்ணியிருக்கிறார்கள். மருத்துவமனை இன்குபேட்டரில் குழந்தையை எலி கடிச்சது உண்மை. அதைத்தான் படத்தில் காண்பித்தால், அதைச் செய்யக்கூடாதுனு சினிமாவில் இருப்பவர்களை அடக்க நினைக்கிறார்கள் அரசியல்வாதிகள்." இவ்வாறு பேசியுள்ளார் நடிகர் அருள்தாஸ்.