1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (10:42 IST)

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி'

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
 
வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. 
 
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்.. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வியக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகள்- ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் வித்தியாசமான தோற்றம் - மயக்கும் பின்னணி இசை- வசீகரிக்கும் வசனங்கள்- விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் வலிமையாக கூட்டணி அமைத்திருப்பதால்.. திரையரங்குகளில் இந்த அறிவியல் புனைவுடன் கலந்த காவிய படைப்பினை காணும் ரசிகர்கள்.. கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறார்கள். 
 
இதனால் ரசிகர்கள் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். 
 
'கல்கி 2898 கிபி' படத்தின் முதல் பாகத்தின் நிறைவு.. இரண்டாம் பாகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பிரபாஸ் கதாபாத்திரத்தின் சரித்திர பின்னணி- சுப்ரீம் யாஸ்கினின் அடுத்த கட்ட நடவடிக்கை-  சிருஷ்டியை பாதுகாக்கும் அஸ்வத்தாமாவின் பகிரத முயற்சி- புஜ்ஜி வாகனத்தின் மாயாஜால செயல்பாடு.. என இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
 
ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தத் திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை நிகழ்த்தியிராத வசூல் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர்கள் நாகார்ஜுனா, அபிஷேக் பச்சன், யஷ், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட ஏராளமானவர்கள் படத்தைப் பற்றி தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பாராட்டுவதுடன், அன்பினையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வசூல் சாதனையை படைத்து வருகிறது.