நான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேனா...? பூஜா ஹெக்டே விளக்கம்!
இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணியில் இதற்கு முன்னால் ஆறு, வேல், சிங்கம் மற்றும் அதன் பிற பாகங்கள் ஆகியவை வெளியாகின. இந்த படங்கள் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.
ஹரியின் 16வது படமான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க இருக்கிறார். இமான் ஹரி படங்களுக்கும் இதுவரை இசையமைத்தது கிடையாது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடந்து முடிய இருந்தது. ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போயுள்ளது. இதற்கிடையில் நேற்று இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள நடிகை ஹெக்டே " நான் தமிழ் படத்தில் நடிக்கிறேன் என்பதை நீங்களே ஆளாளுக்கு முடிவெடுத்து விடாதீர்கள். தற்போது வரை நான் எந்த ஒரு தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை. இரண்டு இயக்குனர்களின் கதையை கேட்க ஒப்புகொண்டுளேன் அவ்வளவுதான். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. எல்லாம் சரியாக அமைந்தால் கூடிய விரைவில் அறிவிப்பேன் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.