செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J. Durai
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (12:01 IST)

’ நந்திவர்மன்’ படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் - நாயகன் சுரேஷ் ரவி நம்பிக்கை!

பத்திரிகையாளர்களை வியக்க வைத்த ‘நந்திவர்மன்! - டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 


ஏகே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில், ‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட புகழ் சுரேஷ் ரவி, போஸ் வெங்கட், ஆஷா வெங்கடேஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நந்திவர்மன்’. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னன் நந்திவர்மனை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் சாகச பயணமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களுக்காக இப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இந்த  சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு  பேசினார்கள்.  

 படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் பேசுகையில்,

“இரண்டரை வருடங்களாக மிகவும் கஷ்ட்டப்பட்டு இந்த படத்தை எடுத்தோம். படத்தில் இடம்பெறும் நந்திவர்மன் பற்றிய ஐந்து நிமிட கிராபிக்ஸ் கதையை, அரங்கம் அமைத்து படமாக்க நினைத்தோம். ஆனால், அதற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதால் எங்களால் எடுக்க முடியவில்லை. இருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகளே ரசிக்கும்படி இருக்கிறது என்று பலர் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல தடைகளை தாண்டி தற்போது படத்தை வெற்றிகரமாக வெளியீட்டுக்கு கொண்டு வந்துவிட்டோம், இனி பத்திரிகையாளர்கள் கையில் தான் இருக்கிறது. படத்தை நீங்கள் பார்த்தீர்கள், உங்களுக்கு என்ன எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை எழுதுங்கள், நன்றி.” என்றார்.

 நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், 

“கன்னி மாடம் என்ற படத்தை முடித்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாக நின்றுக்கொண்டிருந்த போது என்னை காப்பாற்றியது பத்திரிகையாளர்கள் தான். தற்போது என் உதவியாளரான பெருமாள் வரதனும் அதே நிலையில் தான் உங்க முன்பு உட்கார்ந்திருக்கிறார். அவருக்கும் நீங்கள் ஆதரவளித்து கைகொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறு சிறு தவறுகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது, அந்த சிறிய தவறுகளை பெருமாள் வரதனும் செய்திருப்பார், ஆனால் அவை படத்தின் பட்ஜெட்டை சார்ந்தவையாக மட்டுமே இருக்குமே தவிர, அவருடைய திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு தொடர்பாக இருக்காது, அதனால் அந்த தவறுகளை எழுத வேண்டாம். உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதை மட்டும் எழுதுங்கள், இது என் அன்பான கோரிக்கை. 

இந்த படத்தை தயாரித்த அருண் குமார் சினிமா மீது பேரார்வம் கொண்டவர், மிக சிறப்பான தயாரிப்பாளர், தொடர்ந்து படங்கள் தயாரிக்க விரும்புகிறார். உங்கள் எழுத்துகள் மூலம் இந்த படம் வெற்றி பெற்று அவருக்கு போட்ட பணம் கிடைத்தால் என்னைப் போல, பெருமாள் வரதன் போல இன்னும் பல அறிமுக இயக்குநர்களுக்கும், சுரேஷ் ரவி போன்ற வளரும் நடிகர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

 இசையமைப்பாளர் ஜெரால்டு பீலிக்ஸ் பேசுகையில்,

 “எனக்கு இது தான் முதல் படம். எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இதில் கோவில் தொடர்பான காட்சிகள் நிறைய இருந்ததால், அது தொடர்பான இசையமைப்பது புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. நன்றி.” என்றார்.

 இயக்குநர் பெருமாள் வரதன் பேசுகையில்,

 “என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. முதலில் என் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றி. பத்திரிகையாளர்கள் எழுதும் விமர்சனம் தான் இந்த படத்தை அடுக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.நன்றி.” என்றார்.

 படத்தின் நாயகன் சுரேஷ் ரவி பேசுகையில்,

 “பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம். என்னுடைய முதல் படம் ‘மோ’ மற்றும் இரண்டாவது படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ இரண்டு படங்களுக்கும் கிடைத்த வரவேற்புக்கு நீங்க கொடுத்த பாசிட்டிவான விமர்சனம் தான் காரணம். அதுமட்டும் அல்ல, உங்க நடிப்பு நல்லா இருக்கு, என்று நீங்க என்னிடம் சொன்னபோது எனக்கு பொறுப்பு அதிகமானது. அடுத்தடுத்த படங்கள் நல்ல கதையாகவும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த வரிசையில் தான் இந்த படத்தையும் நான் தேர்வு செய்தேன். ‘நந்திவர்மன்’ டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது. நீங்க படத்தை பார்த்துட்டீங்க, இது ஒரு கதை என்பதைவிட வழக்கமான பாணியில் இல்லாத வித்தியாசமான படம்.

குறிப்பிட்ட பட்ஜெட்டில் எடுக்க முடியாத படம் என்றாலும், என்னிடம் கதை சொல்லும் போது மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று தோன்றியது. அதற்கு காரணம் கதையில் சொல்லப்பட்ட நந்திவர்மன் விசயங்கள் தான். ஆனால், அதை எப்படி படமாக்கப் போகிறார்கள், என்று தோன்றியது. அதன்படி தயாரிப்பாளரை சந்தித்தேன், அவருக்கு சினிமா மீது அதிகம் ஆர்வம் உண்டு. வேறு ஒரு துறையில் இருந்தாலும் சினிமாத்துறையின் மீது ஆர்வமாக இருக்கிறார். எத்தனையோ பேரிடம் பணம் இருந்தாலும், சினிமாவில் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும், நல்ல படத்தை தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வராது. அப்படிப்பட்ட ஆர்வம் எங்கள் தயாரிப்பாளரிடம் இருந்தது, அந்த வகையில், இந்த படக்குழுவினர் அவர் தயாரிப்பில் படம் பண்ணியது நிச்சயம் கடவுள் ஆசீர்வாதம் தான். 

இந்த படம் நிறைய பேருக்கு முதல் படம், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகை ஆஷா வெங்கடேஷ் என அனைவருக்கும் இந்த படம் தான் துவக்கம். நீங்கள் படத்தில் இருக்கும் நல்ல விசயங்களை எழுதி மக்களிடம் கொண்டு சென்றால் இவர்களுக்கு உதவியாக இருக்கும். நிச்சயம் நீங்கள் நல்ல படத்தை தூக்கி விடுவீர்கள் என்று தெரியும், அது இந்த படத்திற்கு நடக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

படம் வெற்றிபெற கோவிலுக்கு சென்றேன், அப்போது எனக்காக அல்லாமல் இருவருக்காக இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். தயாரிப்பாளர் அருண் குமார் மற்றும் இயக்குநர் பெருமாள் வரதனுக்காக வேண்டிக் கொண்டேன். சினிமாவில் சுமார் பத்து, பதினைந்து வருடங்கள் பயணித்து வருபவர் இயக்குநர் பெருமாள் வரதன். 

ஒரு அறிமுக இயக்குநருக்கு முதல் படம் எவ்வளவு முக்கியம் என்பதும், அந்த வாய்ப்பு பெற அவர்கள் எத்தனை வருடங்கள், எத்தனை பிரச்சனைகளை சந்தித்து வந்தார்கள், என்பதை நான் அறிவேன். நானும் ஒரு இயக்குநருடன் பயணித்திருப்பதால் அவர்களுடைய கஷ்ட்டங்கள் எனக்கு தெரியும். 

பெருமாள் வரதனும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார், பல இழப்புகளையும் சந்தித்திருக்கிறார், அதனால் இந்த படம் அவருக்கு நிச்சயம் வெற்றி கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். அடுத்தது என் தயாரிப்பாளர் அருண் குமார். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு முக்கியம் என்பது பல வருடங்கள் வாய்ப்புக்காக காத்திருப்பவர்களை கேட்டால் தெரியும். நானும் பல வருடங்களாக பல நிறுவனங்களில் ஏறி இறங்கியிருக்கிறேன்.

அந்த வகையில், இந்த படத்தின் கதையை கேட்ட நாள் முதல் அருண் குமார், படத்தை எப்படி எல்லாம் எடுக்கலாம், எதற்கெல்லாம் செலவு செய்யலாம் என்று கதையுடன் பயணிக்க தொடங்கி விட்டார். இன்று படம் வெளியீட்டுக்கு வந்துவிட்ட பிறகும், ஒரு உதவி இயக்குநர் போல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் எங்கள் படக்குழு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் ‘நந்திவர்மன்’ படம் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.

சேயோன் முத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்திருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, சுதேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை இயக்குநராக பணியாற்ற, மதன் கார்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர். சிவகார்த்திக் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிருக்கிறார்

ரகுராம் ஒப்பனை பணியை கவனிக்க, ஸ்ரீகிரீஷ் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். ஒலிக்கலவை மற்றும் வடிவமைப்பை ஹரி பிரசாத்.எம்.ஏ கவனித்துள்ளார். ரமேஷ் மற்றும் ஹரி வெங்கட் தயாரிப்பு மேலாலர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். ஆர்.பலகுமார் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.