மும்தாஜ் ஒரு ஓவியாவா? காயத்ரியா?
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள் சுவாரஸ்யம் இன்றி உள்ளனர். பாலாஜி தவிர வேறு யாருமே ஆக்டிவ்வாக இல்லை. செண்ட்ராயன், டேனி ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும் அவர்களால் எரிச்சல் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. பொன்னம்பலம், அனந்து ஆகியோர் ஏன் இந்த போட்டியில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டனர் என்பதே தெரியவில்லை.
ஆண் போட்டியாளர்களுக்கு நேர்மாறாக பெண் போட்டியாளர்கள் உள்ளனர். யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் விரைவில் பின்னி பிணைந்துவிட்டனர். இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டி குறிப்பாக செண்ட்ராயனை கட்டம் கட்டும் விதம் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த கூட்டணி நிச்சயம் இறுதி போட்டி வரை வர வாய்ப்புள்ளது.
பெண் போட்டியாளர்களில் மும்தாஜ் தன்னை முன்னிலைப்படுத்துவதில் குறியாக உள்ளார். மகத், ஹாரீக் மீது அன்பை பொழியும்போது ஓவியாகவும், நித்யாவுடன் சண்டை போடும்போது ஒரு காயத்ரியாகவும் நடந்து கொள்வதால் ரெண்டுக்கட்டானாக உள்ளார். மேலும் முதல் சீசனில் ஓவியாவுக்கு கிடைத்த புகழை மனதில் வைத்து எல்லோருமே ஓவியாவை காப்பியடிக்க செய்யும் முயற்சி செயற்கையாக உள்ளது. ஓவியா, ஓவியாகவே இருந்ததால்தான் அவருக்கு அவ்வளவு புகழ் கிடைத்தது. அதேபோல் போட்டியாளர்கள் ஓவியா போன்று இருக்க முயற்சி செய்யாமல் அவர்களாக இருக்க வேண்டும் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. மொத்தத்தில் இந்த இரண்டாம் சீசன் பிக்பாஸ் இன்னும் தனது சுவாரஸ்யத்தை ஆரம்பிக்கவில்லை