மம்மூட்டியின் படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்படவேயில்லை… தேர்வுக்குழுவில் இருந்த இயக்குனர் தகவல்!
நேற்று திரைப்படங்களுக்கான 70 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பல விருதுகளை வென்றிருந்த பல பெயர்கள் தீவிர சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் இதுபோன்ற ஒரு சர்ச்சை கிளம்பி வருகிறது.
சமீப சில ஆண்டுகளாக தேசிய விருதுகள் மக்களிடம் கலையுணர்வைத் தூண்டும் பெரிய அளவில் அங்கீகாரம் பெறாத படங்களுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக கமர்ஷியலாக வெற்றி பெற்ற மாஸ் மசாலா படங்களுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு கூட பெரும்பாலும் பொழுதுபோக்கு தன்மை கொண்ட படங்கள் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் சிறந்த நடிகருக்கான விருது காந்தாரா திரைப்படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது. மம்மூட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் ரோர்ஸ்க்ராட்ச் ஆகிய படங்களுக்கு அவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்த மலையாள ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து தேசிய விருதுகள் இனம், மதம் எல்லாம் பார்த்து வழங்கப்படுவதாக சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து தென்னிந்திய விருதுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த இயக்குனர் பத்மகுமார் “மம்மூட்டியின் படங்கள் எதுவும் தேர்வுக்குழுவினரின் பார்வைக்குக் கொண்டுவரப்படவில்லை” எனக் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.