நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற தங்கலான ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தங்கலான் படம் வெளியான போது மாளவிகா நடித்திருந்த ஆரத்தி கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்து பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. ஆனால் தங்கலான் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்த்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. மாளவிகா இப்போது தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் அவரளித்த ஒரு நேர்காணலில் “நடிகர்கள் நவீன நாடோடிகள் போன்றவர்கள். ஒரு நாள் எங்கோ ஒரு நகரத்தில் ஷூட்டிங் இருக்கும். அடுத்த நாள் ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும். இதற்காக நடிகர்கள் அந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். உணவு, வானிலை அந்த பகுதிகளின் விதிகள் என அனைத்தையும் மாற்றிக் கொள்ளவேண்டும். ஒரு படம் ஓடினால் அதன் பாராட்டுகள் எல்லாம் ஆண் நடிகர்களுக்கு செல்கிறது. ஆனால் படன் ஓடவில்லை என்றால் பெண் நடிகர்களை அதற்குக் காரணமாக காட்டி விடுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.