வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (12:51 IST)

ரஸாக்கர் இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் படமா? உண்மை வரலாறா..? – பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் விளக்கம்!

Razakar Poster
பாபி சிம்ஹா நடித்து வெளியாகவுள்ள ‘ரஸாக்கர்’ திரைப்படம் ஹைதராபாத்தில் நடந்த உண்மை வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.



சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.  
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி பேசியபோது ”இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான,  ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை என நினைக்கிறேன். இப்போதைய  ஹைதராபாத் 1948ல் இந்தியாவில் சேர்க்கப்படுவதற்கு முன், முஸ்லீம் நிஜாம் மன்னரால் துர்க்கிஸ்தானாக மாற்றப்படுவதாக இருந்தது. இந்திய அரசால் அது தடுக்கப்பட்டது. எங்கள் வம்சத்தில் என் தாத்தா போராடி மக்களை மீட்ட கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் அந்தப்போராட்டத்தில் தான் உயிர் நீத்தார். இந்தக்கதை ஹைதராபாத் மக்கள் மீது கட்டவிழ்த்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தை, அதிலிருந்து ஹைதராபாத் மீண்டு வந்த கதையை பதிவு செய்யும். இதை எப்படியாவது திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது.  இக்கதையை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி” என தெரிவித்துள்ளார்.

 நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது “வாழ்த்த வந்த அனைவருக்கும் முதலில் நன்றி. முதலில் இந்தக் கதை கேட்ட போது,  எனக்கே சரியாக புரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு, எனக்கே தெரியாமல் இருந்தது. இந்த உண்மை பற்றி தேடித் தெரிந்துகொண்டேன். உடனே கண்டிப்பாக இந்தப் படம் செய்கிறேன் என்றேன். உலகத்திற்கு இந்த கதை தெரிய வேண்டும். குடூர் நாராயண ரெட்டி சாருக்கு என் நன்றி. அவர் தாத்தா இந்தப் போராட்டத்தில் போராடி இறந்துள்ளார்.

அவர் நினைத்தால் ஒரு கமர்சியல் படம் எடுத்திருக்கலாம் ஆனால் 40 கோடியில் இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டுமென, இப்படத்தை எடுத்துள்ளார். இப்படி ஒரு படத்தை உருவாக்க முனைந்த இயக்குனருக்கு நன்றி. நடிகை வேதிகா, இப்படத்தில் முதலில் அவரை மேக்கப்போடு பார்த்த போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. அத்தனை மாறியிருந்தார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அனுஷா புது நடிகை மாதிரியே தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார். ஜான் விஜய், தலைவாசல் விஜய் சார், ராம்ஜி சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படத்தில் அத்தனை கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படம் வரலாற்றில் மிக முக்கியமான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Razakar Poster

 
 இயக்குநர் யதா சத்யநாராயணா பேசியதாவது “தமிழ் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். மணிரத்னம் சார் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். சுஹாசினி மேடத்திடம் இந்தக் கதையை போனில் சொன்னேன், அவர் என்னைப் பாராட்டினார். இப்படத்திற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னார், அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முழுப் பாத்திரமாக மாறிய பாபிக்கு என் நன்றி. கோலிவுட் தென்னிந்தியாவுக்கு தாய் மாதிரி. ரஸாக்கர் மூலம் அறிமுகமாகும் என்னை இங்கு ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் மக்களுக்கு, ஒரு படம் பிடித்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இப்படம் அவர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தியாவிற்கே சுதந்திரம் கிடைத்த போது, ஹைதராபாத்தில் மக்கள் நிஜாமுக்கு எதிராகப் போராடி கொண்டிருந்தார்கள்.

வல்லபாய் படேல் எடுத்த நடவடிக்கைகள் மூலம், போர் செய்து தான் ஹைதராபாத் விடுதலை செய்யப்பட்டது. பல மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை வல்லபாய் படேல் தான் ஒருங்கிணைத்தார். ஆனால் ஹைதராபாத் மாநிலத்தை அத்தனை எளிதாக ஒருங்கிணைக்க முடியவில்லை. அது துர்கிஸ்தானாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள இந்து மக்கள் நிஜாம் மன்னரால் துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சீரழிக்கப்பட்டார்கள். ரஸாக்கர் ஹைதராபாத் மக்கள் மீது நடத்திய வன்முறை அளவில்லாதது. அதைத்தான் இப்படத்தில் சொல்ல முயன்றுள்ளோம். தமிழ் ரசிகர்கள் எங்களின் வரலாற்றைச் சொல்லும் இப்படத்தை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி” என்று கூறியுள்ளார்.