ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது: நடிகர் அபிஷேக் பேச்சு!
'மோகமுள்' திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன .அந்த வகையில் 'மோகமுள்' படத்திற்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அப் படத்திற்காக எழுதிய திரைக்கதையை நூலாக அப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ் உருவாக்கியிருக்கிறார்.இந்த நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.'மோகமுள்' திரைக்கதை நூலின் வெளியீடு ,44வது புத்தகக்காட்சியில் காவ்யா பதிப்பக அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் திரைக்கதை நூலை அந்தப் படத்தின் நாயகனாக நடித்த அபிஷேக் வெளியிட்டார்.ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பாரம்பரிய மரபுகள் குறித்த ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி பெற்றுக்கொண்டார்.
நூலை வெளியிட்டு நடிகர் அபிஷேக் பேசும்போது,
" மோகமுள்' தான் எனக்கு முதல் படம் .மும்பையில் இருந்த என்னைத் தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் இதில் நடிக்க வைத்தார்.எனக்கு தமிழே தெரியாது. ஆனாலும் தமிழ் பேசி என்னை நடிக்க வைத்தார்.
என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் "எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தீர்கள்?" என்பார்கள்.நான் "மோகமுள் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன்" என்பேன். 'மோகமுள்' படத்தில் நடித்த போது மூன்றாண்டு காலம் கற்றுக்கொண்ட அனுபவத்தில்தான் இன்றுவரை என் பயணம் சென்று கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது.
மும்பையில் பிறந்து சென்னையில் செட்டில் ஆகி இருக்கும் நான், 'இது எனக்கு எழுதி வைக்கப்பட்ட விதி 'என்று நினைக்கிறேன் .அதுவும் இயக்குநர் எழுதி வைத்த விதி என்று நினைக்கிறேன். 'மோகமுள்' என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தேன்.அதன்மூலம் எனக்கு 25 ஆண்டுகாலம் சினிமா டிவி என்று நடிக்கிற வாழ்க்கை கிடைத்தது.
தமிழில் பேசத் தெரியாத எனக்கு இந்த படத்திற்குப் பின் தமிழகத்தில் ஓர் இடம் கிடைத்துவிட்டது .தமிழில் பேசவும் படிக்கவும் எழுதவும் கூட கற்றுக்கொண்டு விட்டேன்.அந்த வகையில் இயக்குநருக்கு நன்றி. இந்தப்படத்தின் நினைவுகள் நூறாண்டு தாண்டியும் இருக்கும் என்று நம்புகிறேன். " என்றார்.