சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாளை முன்னிட்டு நாடகக் கலைஞர்கள் பேரணி!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு இசை நாடக கலைஞர் மாநில பேரவை மற்றும் மணப்பாறை நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நாடக உலகின் தந்தை என போற்றப்படும் டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் சாலையில் உள்ள சங்க அலுவலகத்திலிருந்து நாடக கலைஞர்கள் அம்மன், கருப்பசாமி வேடமணிந்த கலைஞர்களுடன் பறைஇசை ஆட்டம் பாட்டத்துடன் பேரணியாக சென்றனர்.
பேருந்து நிலையம், புதுத் தெரு, திருச்சி சாலை வழியாக மாரியம்மன் கோவில் வழியாக சென்று பெரியார் சிலை ரவுண்டானா அருகே பேரணி முடிவடைந்தது. பின்னர் பண்ணை சிங்காரவேலன் குழுவினரின் பரதநாட்டியம், தெய்வீக கிராமிய நிகழ்ச்சி, தப்பாட்ட சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து விடிய விடிய வள்ளி திருமணம் எனும் நாடகமும் நடைபெற்றது. இதில் மணப்பாறை நாடக கலைஞர் திரளாக கலந்து கொண்டனர்.