கேள்வி கேட்க அருகதை இல்லாத கட்சி திமுக: பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்திருப்பதாகவும் இரு கட்சிகளும் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திமுகவும், பாஜகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் மட்டுமே இன்றும் தமிழகம் பயன் பெற்று வருகிறதே தவிர 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளால் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை. காமராஜரால் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்று மூடப்பட்டு வருகின்றன.
ஒரு நாட்டை, மாநிலத்தை முன்னேற்ற எத்தனை நாட்கள், ஆண்டுகள், மாதங்கள் தேவை என அரசியல்வாதிகளிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதிலை வைத்து எடை போட முடியும். தமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி ஒன்று உண்டு என்றால் அது தி.மு.க. தான்' என்று பேசியுள்ளார்.
திமுகவை கடுமையாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்ததை அடுத்து விரைவில் திமுக தரப்பில் இருந்து இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.