9ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம்.. பெற்றோர் மீது வழக்கு.. கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு 25 வயது நபருடன் திருமணம் செய்து வைத்ததை அடுத்து, அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் ஆன சிறுமி தாலியை தனது உடைக்குள் மறைத்து வைத்தபடியே பள்ளிக்கு வந்ததாகவும், ஆனால் ஆசிரியர்கள் அதை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டபோது, தனது பெற்றோர்கள் தனக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து ஆசிரியர்கள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்ததாகவும், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வீட்டில் விசேஷம் எனக் கூறி மாணவி மூன்று நாட்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்ததாகவும், திருமணத்திற்காகவே அவர் விடுமுறை எடுத்தது விசாரணையில் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 14 வயது சிறுமியை திருமணம் செய்த 25 வயது நபர் மீதும் சிறுமியின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva