1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 மார்ச் 2018 (13:05 IST)

ஸ்டிரைக்கில் திடீர் குழப்பம்: சென்னை திரையரங்குகள் இயங்கும் என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்டிரைக்கில் சென்னை திரையரங்குகள் கலந்து கொள்ளது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஸ்டிரைக்கில் திடீரென குழப்பம் ஏற்பட்டுள்ளது

தமிழக அரசின் கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பது உள்பட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 16 முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்தது. ஆனால், இந்த வேலை நிறுத்தத்தில் சென்னை நகர திரையரங்குகள் மற்றும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகள் கலந்து கொள்ளாது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் சற்றுமுன் அறிவித்துள்ளார்

இதுகுறித்து அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'சென்னையில் உள்ள திரையரங்குகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே, வழக்கம்போல் சென்னையில் உள்ள 147 திரையரங்கு உரிமையாளர்களும் செயல்படும். இந்த முடிவை சென்னை திரையரங்க உரிமையாளர்களால் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் படங்கள், பிறமொழிப் படங்கள் சென்னை திரையரங்குகளில் திரையிடப்படும்' என்று கூறினார். இதனால் இந்த வேலைநிறுத்தம் பிசுபிசுத்து போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.