1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (09:17 IST)

இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை ரத்து! - மீண்டும் தலைவராக போட்டியிடும் தீனா!

Dheena
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறுகிறது - 3வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் தீனா


 
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் 2023  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இதை எதிர்ப்பு ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை தொடர்ந்து திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் மீண்டும் நடத்தப்பட இருக்கிறது.

வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள திரைபப்ட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாக, சங்கத்தின் தலைவர் தீனா அறிவித்துள்ளார். மேலும், தேர்தலில் மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இது குறித்த அறிவிப்பை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் தீனா, “அசோசியேட் உறுப்பினர்களுக்கு எந்த வகை சலுகைகளும் இல்லாமல் இருந்ததோடு, அவர்களுக்கு வாக்கு உரிமை உள்ளிட்ட எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. இது பற்றி பலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள்.

 
அதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நான் முயற்சி மேற்கொண்டு அவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தேன்.

தற்போது மூன்றாவது முறை நான் தலைவராக வெற்றி பெற்றால், அசோசியேட் உறுப்பினர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க பாடுவேன்.

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் தான் முதல் சங்கம். ஆனால், எங்கள் கட்டிடம் இன்னும் பழமையாகவே இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். நான் முதல் முறையாக தலைவராக வந்த போதே இதற்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால், கொரோனா பாதிப்பு வந்ததால் தடைப்பட்டு விட்டது. தற்போது நான் மீண்டும் தலைவரான இந்த முறை சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுவேன்.” என்று தெரிவித்தார்.

Updated by Prasanth.K