சம்பளத்தில் விஜய்யை முந்தினாரா அல்லு அர்ஜுன்?
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே 1000 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சம்பளமாக இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற விகிதத்தில் அல்லு அர்ஜுன் இந்த படத்துக்கு 300 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெற்றவர் என்ற விஜய்யின் சாதனையை அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளார். விஜய் தன்னுடைய கடைசி படத்துக்கு 275 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.