Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:13 IST)
அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி மக்களிடம் கேட்டு முடிவு செய்ய வேண்டும்: பாக்யராஜ் வேண்டுகோள்!
தமிழக அரசியாலில் அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதி மக்களின் கருத்தைக் கேட்ட பிறகு யாருக்கு ஆதரவு தர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் கே பாக்யராஜ் கூறியுள்ளார்.
அதிமுக அபிமானியும், எனது கலையுலக வாரிசு என எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்டவருமான கே பாக்யராஜ் அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், எம்எல்ஏ-க்கள் நமக்கு ஒருவர் அல்லது ஒரு குடும்பம் எம்எல்ஏ சீட் வாங்கி தருகிறது என்று சொன்னால் அந்த குடும்பத்துக்கு கடைசிவரை விசுவாசமாக இருக்கணும் என்று நினைப்பது தவறு இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஓட்டு போட்ட எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது. அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
எனவே ஆங்காங்கே ஒளிந்து கொண்டு, மறைந்து கொண்டு நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன் என்று கூறிவதை விட்டு விடுங்கள். உடனடியாக தொகுதி மக்களை சந்தித்து, அவர்கள் கருத்தைக் கேட்டு அதன்படி முடிவு எடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.