வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (13:56 IST)

உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன்: ரசிகர்களுக்கு சிம்பு வாக்குறுதி!

நீண்ட நாட்களுக்கு பிறகு படங்களில் நடித்து வரும் சிம்பு இனி தொடர்ந்து படங்கள் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
சிம்பு

கடந்த சில ஆண்டுகளாக படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இருந்த சிம்புவால் பல பட வாய்ப்புகள் அவரை விட்டு போனது. சிம்புவை நம்பி படம் எடுக்க பல இயக்குனர்களும் பயந்த நிலையிலும் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து மாநாடு படத்தை தொடங்கினார். ஆனால் அந்த படத்திற்கு சிம்பு சரியாக வராததால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்த சிம்பு சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ”சிறு வயதிலிருந்தே உங்கள் ஆதரவால் நடித்து வருகிறேன். இடையே எனக்காக சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டேன். இப்போது திரும்பியிருக்கிறேன். நாம் ஜெயிக்கும்போது நம்மோடு ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் நான் ஜெயித்த போதும், தோற்ற போதும் கூட என்னோடு இருந்தவர்கள் நீங்கள். உங்களுக்காக நான் தொடர்ந்து நடிப்பேன்” என கூறியுள்ளார்.

சிம்புவுக்கென தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருந்தாலும் சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்ததால் அவர்கள் வருத்தத்தில் இருந்தார்கள், தற்போது சிம்புவின் இந்த உறுதி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.