திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (12:48 IST)

மாஸ்டர் ஆடியோ வெளியீடு இடம் மாற்றம்? ஏப்ரலில் படம் ரிலீஸா? – பரபரப்பு தகவல்கள்!

மாஸ்டர் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா இடம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்டன. இந்த படத்தின் முதல் பாடலான விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் இன்று வெளியாக இருக்கிறது.

விஜய்யின் கடந்த படமான பிகிலுக்கு ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது போல மாஸ்டருக்கும் நடத்த திட்டமிடப்படுகிறது. ஆனால் சமீப காலமாக வருமானவரி சோதனை, படப்பிடிப்பு பகுதியில் போராட்டம் என விஜய்க்கு சிக்கல்கள் நீண்டு வருகின்றன. பிகில் ஆடியோ வெளியீடு தாம்பரத்தில் நடைபெற்ற போது அங்கு போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதாலும், ரசிகர்கள் டிக்கெட் பெற்றும் அனுமதி கிடைக்காமல் போனதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் இந்த முறை இந்த வகையான பிரச்சினைகள் எழாத வண்ணம் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் இல்லாமல் தமிழத்தில் உள்ள வேறு முக்கியமான ஊர் ஏதாவது ஒன்றில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.