வியாழன், 28 நவம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2016 (15:06 IST)

விஜயகாந்தின் கனவு நிறைவேறுமா: ஆட்சியை கைப்பற்றுமா மக்கள் நல கூட்டணி?

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி முடிவுகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன.


 

 
இந்த தேர்தலில் விஜயகாந்த் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார். அதேபோல மக்கள் நல கூட்டணியானது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.
 
அந்த வகையில், தேமுதிக வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, மக்கள் நல கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்கிறது.
 
விஜயகாந்த் முதலமைச்சராக வேண்டும் என்பது தேமுதிக தரப்பினரின் முக்கிய நிபந்தனை மட்டுமல்ல கனவும் கூட. அதன் அடிப்படையில் தேமுதிகவிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆனால், இதன் முடிவுகள் மே 16 ஆம் தேதி வாக்களிக்கவுள்ள மக்களின் கைகளில்தான் இருக்கின்றது.
 
பொதுவாக மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. மறுபுறம் கட்சி சாராத பொதுமக்கள் பலர் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக ஒரு நல்லாட்சியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், மக்களின் இந்த மனநிலை மக்கள் நல கூட்டணிக்கு சாதகமாக அமைய வாய்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
 
ஊடகங்கள் நடத்தும் அரசியல் விவாத மேடைகளில், மக்கள் நல கூட்டணி தமிழக அரசியலில் பெரிய சக்தியாக வளர்ந்திருப்பதாக பேசப்படுகின்றது.
 
2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருந்தது.
 
ஆனால் தற்போது, மக்கள் நல கூட்டணியில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, மார்க்ஸிட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தேமுதிக ஆகியவை இடம் பெற்றுள்ளன.


 

 
கடந்த சட்டமன்ற தேர்தலில், தேமுதிக 7.88 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி 1.97 சதவீத வாக்குகளும், மார்க்ஸிட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி 2.41 சதவீத வாக்குகளையும் பெற்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி 1.51 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை.
 
அதிமுகவின் வாக்கு வங்கி 38.40 சதவீதமாக இருந்தது. திமுகவின் வாக்கு வங்கி 22.39 சதவீதமாக இருந்தது.
 
இவைகளைக் கொண்டு கணக்கிட்டால், தற்போதுள்ள மக்கள் நல கூட்டணியின் வாக்கு வங்கி சதவீதம் 13.77 என்ற நிலையில் உள்ளது. ஆனால், இந்த தேர்தலைப் பொருத்தவரையில் கடந்த காலங்களில் இந்த அரசியல் கட்சிகள் பெற்றிருந்த வாக்கு வங்கியை வைத்து மதிப்பிடுவது பொருத்தமாக இருக்காது என்று கூறப்படுகின்றது.
 
ஏனென்றால் ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர்களில், தீவிர உறுப்பினர் அல்லாத வெளிவட்டத்தில் இருப்பவர்கள் வேறு அணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் அரசியல் ஊழல்களால் தமிழக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். எந்த அரசியல் கட்சிகளையும் சேராதவர்களின் பெரும்பான்மையான வாக்குகள் மக்கள் நல கூட்டணிக்குக் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.
 
இத்தகு காரணங்களால் மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைந்து தேர்தலை சந்திப்பது என்பது அந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகின்றது. டெல்லியில், ஆம்ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் ஆட்சி ஏற்பட்டதைப் போல தமிழகத்தில் மக்கள் நல கூட்டணியால் அரசியல் மாற்றம் நிகழ வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
எது எப்படியாயினும் இதன் முடிகளை அறிய, மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கைப் பொறுத்துதான் தெரியவரும்.