ஒய்வுபெறும் வயதில் மாநாடு படம் எனக்கு புரமோஷன் கொடுத்துள்ளது - ஒய்.ஜி.மகேந்திரன்!
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, “சினிமாவிற்கு வந்து ஐம்பது வருடங்களாக நடித்து வருகிறேன்.. கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் தான், உனக்கு ரிட்டயர்மென்ட் இல்லை.. இன்னும் பதினைந்து வருடங்கள் நீ நீடிக்கலாம் என இந்த மாநாடு படம் எனக்கு புரோமோஷன் கொடுத்துள்ளது. இவ்வளவு வருடங்களாக நான் நடித்து வந்தாலும், மாநாடு படத்தை பார்த்துவிட்டு பலரும், இவ்வளவு நல்லா நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள்..
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சி போல திருவிளையாடலில் தருமி வரும் காட்சி போல இந்தப் படத்தில் சிம்பு எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் நான் இணைந்து நடித்த காட்சி, ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட முரட்டுக்காளை படத்தில் நடித்த காலகட்டத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டது போல எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.. இசைஞானி இளையராஜாவே போன் செய்து, “பின்னிட்ட” என்று பாராட்டியது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது” என்று கூறினார்