ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (10:31 IST)

ஒருவரே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் எப்படி குரல் எழுப்ப முடியும்? - விஷாலை தாக்கி ஸ்ரீகாந்த் பேட்டி

ஏப்ரல் 2 -ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது. 5 அணிகள் மோதுகின்றன. இதில்  தயாரிப்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணிக்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். அது குறித்த பேட்டியின் போது அவர் நேரடியாகவே விஷாலின் செயல்பாடுகளை விமர்சித்தார். அந்த  பேட்டி...


 
 
எவ்வளவு நாள் புலம்பப் போகிறோம்...?
 
இன்னும் எவ்வளவு நாள்தான் மேடைதோறும் பணத்தை இழந்தோம், மரியாதையை இழந்தோம், நிம்மதியை இழந்தோம்,  கடனாளியாகி விட்டோம், தெருவுக்கு வந்து விட்டோம் என்று தயாரிப்பாளர்களின் வருத்தத்தையும் வலியையும் மட்டும்  சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம்?
 
நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும்
 
நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி தெரியும். ஒரு படம் எடுத்துப் பார்.  அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி என்ன என்பது தெரியும். அந்த வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால்தான்  சொல்கிறேன், நடிகர்கள் சொந்தப் படம் எடுக்க வேண்டும். இப்போது எல்லா நடிகர்களும் தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள்.  நல்லது... வரட்டும் வந்து உணரட்டும்.
 
விஷால் செய்வது என்னவிதத்தில் நியாயம்?
 
ஒரு நடிகனாக நடிகர் சங்கத்தில் வாக்களித்தது நல்ல மாற்றம் வரும் என்கிற நம்பிக்கையில்தான். அதை நான் இன்னமும்  இழக்கவில்லை. ஆனால் எனக்கு இப்போது ஒரு கேள்வி எழுகிறது. நடிகர்களுக்காகப் பணியாற்றுவீர்கள் என்றுதான்  விஷாலுக்கு வாக்களித்தோம். ஆனால் அந்தப் பணியை முடிக்காமல் இன்னொரு வேலையையும் பார்ப்பேன் என்பது எந்த  விதத்தில் நியாயம்?
 
ஜனநாயகம் இல்லையே...
 
விஷால் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு  போட்டியிடுகிறார். எப்படி ஒருவர் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் நிர்வாகத்துக்கு குரல் எழுப்ப முடியும்? எப்படி இரண்டு  பேருக்கும் குரல் எழுப்ப முடியும்? இரண்டு இடத்திலும் ஒருவரே இருந்தால் அது ஜனநாயகம் இல்லையே.
 
வலி தெரியாது...
 
தங்கள் சுயநலத்துக்கு படமெடுப்பவர்களுக்கு தயாரிப்பாளர்களின் வலி தெரியாது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்  முன்னேற்ற அணியில் உள்ளவர்களுக்கு சுயநலம் இல்லை. இவர்களைப் போன்ற தயாரிப்பாளர்களின் வலி தெரிந்தவர்கள்தான்  வரவேண்டும். இந்த அணி நிச்சயம் வெற்றி பெறும்.