1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. கட்டுரைகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (15:15 IST)

இறுதிப் போட்டியை வெல்லுமா இந்திய அணி?

டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழக்காமல் இந்திய அணி இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடிக்குமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
இந்­தியா – தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி கொல்­கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்­கி­றது.
 

 
3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
 
முதல் இரண்டு போட்டிகளிலும் வென்ற தெம்போடு தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கும். அது மட்டுமல்லாமல், அந்த அணியில் டி வில்லியர்ஸ், கேப்டன் டு பிளஸ்ஸி, குவிண்டன் டி காக், ஹசிம் அம்லா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சிலும் மில்லர், டுமினி, இமரான் தாஹிர் உள்ளிட்ட தரம் வாய்ந்த பவுலர்கள் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பர்.
 

 
இந்திய அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு அதன் அசைக்க முடியா பேட்டிங்தான் பலம். அதற்கேற்றார் போல் முதல் போட்டியில் 200 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது. ஆனால் இரண்டாவது போட்டியில் 92 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையு இழந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆனாலும், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, தோனி, விராட் கோலி இவர்களில் ஒருவர் நிலைத்து நின்று ஆடினாலும் ஆட்டத்தின் போக்கு மாறிவிடும். தொடர்ந்து பந்துவீச்சில் இந்திய அணி சொதப்பி வருகிறது. வலுவான அணியை எதிர்கொள்ளும்போது அதற்கேற்றார் போல் பந்துவீசுவது அவசியம்.
 
தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர், “நாங்கள் மாபெரும் கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் 2-0 என்று முன்னிலையில் உள்ளோம், எனவே 3-0 என்று அதனை மாற்ற உறுதியாக இருக்கிறோம்” என்று சூளுரைத்துள்ளார்.
 
இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில், “நாங்கள் தொடரை இழந்துள்ளோம். ஆனாலும், இறுதிப்போட்டியில் நிறைய விளையாட இருக்கிறோம். நிச்சமயமாக நாங்கள் வெல்வோம். பிறகு எங்களது கதையே வேறுமாதிரியாக இருக்கும். நாங்கள் ஒரு தடவை வெற்றி பெற்றுவிட்டால், பிறகு எங்களை தோற்கடிப்பது கடினம்” என்றார்.
 
இதனால் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது உறுதி. மேலும், கட்டக்கில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் வெறுப்படைந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி கலாட்டா செய்தனர். இதனால், இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.