1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. கட்டுரைகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (10:28 IST)

இந்திய மகளிர் ஹாக்கி அணி எதிர்கொள்ளும் சவால்கள்

அடுத்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றிருந்தாலும், பெரிய சவால்களையும் அந்த அணி எதிர்நோக்குகிறது.

அடிப்படையில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு இந்தியாவில் போதுமான ஆதரவு இல்லாததே அந்த அணி எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்கிறார் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரான வாசுதேவன் பாஸ்கரன்.

ரியோ சென்ற பிறகு நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளை எதிர்த்து இந்திய அணி எப்படி ஆடும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி என்கிறார் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைவராக இருந்த பாஸ்கரன்.

ரியோ போட்டிகளுக்கு முன்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணி இங்கிலாந்து சென்று அங்கு இரண்டு மாதங்கள் பயிற்சி பெறுவது அணிக்கு வலு சேர்க்கும் என்கிறார் பாஸ்கரன்.

அப்படிச் செய்தால் முதல் பத்து இடங்களுக்குள் இந்திய அணி வருவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

இந்திய அணி தமது உடல் தகுதியை மேம்படுத்துவது, இருக்கக் கூடிய தொழிநுட்ப வல்லமையை மேலும் பலப்படுத்துதல், தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடக் கூடிய மன உறுதியை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்கிறார் பாஸ்கரன்.

அறிவியல்பூர்வமாக இந்திய ஹாக்கி அணிக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்தார் பாஸ்கரன்.

இதர அணிகளின் பலவீனங்களை ஒப்பீட்டு அளவில் கவனித்து, அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதே சிறந்த வழியாக இருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

ரியோ போட்டிகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற அணிகளை இந்தியாவுக்கு அழைத்து பயிற்சிப் போட்டிகளில் ஆட வைப்பதும் கூடுதல் பலனை அளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.