ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடும் யுகாதி பண்டிகை !!
ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களது புத்தாண்டு பிறப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள்.
யுகாதி அன்று அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவார்கள். யுகாதி பச்சடி என்ற ஒரு உணவை தயாரிப்பார்கள்.
அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி, உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள்.
இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள்.
அன்றைய தினம் ஆஸ்தான பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டின் பலன் கூறுவர். கோயில்களில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும் என்பது நம்பிக்கை.
சைத்திர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாகக் கருதப்படுகிறது. மேலும் சைத்திர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் ஜோதிடத்தில் யுகம் என்று குறிக்கின்றனர்.