திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவ வடிவங்களில் ஒருவரான தட்சணாமூர்த்தியின் வழிபாட்டு பலன்கள் !!

மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும்.


அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
 
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. 
 
இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64 சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும்.
 
தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.
 
தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. 
 
இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.
 
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”.