அமாவாசை நாளில் முன்னோரை வணங்குவது ஏன்...?
அமாவாசையில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. அமாவாசை என்பது மிக முக்கியமான நாள். அமாவாசை என்பது பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களுக்கான நாள்.
ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவார்கள்.
அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது சிறப்பும் மகத்துவமும் மிக்கது. நம் முன்னோர்களின் பெயர்களையும் கோத்திரத்தையும் சொல்லி அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். அதேபோல, முன்னோரின் படங்களுக்கு சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். பூக்களால் அலங்கரிக்க வேண்டும். துளசி மாலை சார்த்துவதும் விசேஷ பலன்களைக் கொடுக்கவல்லது.
முன்னோர் வழிபாட்டில், நைவேத்தியம் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. அமாவாசை நாளில், நம்மால் முடிந்த உணவுகளைச் செய்து, முன்னோர்களுக்குப் படையலிட வேண்டும். படையலிட்ட உணவை, காகத்துக்கு வழங்க வேண்டும். அதன் பின்னரே உணவருந்த வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முக்கியமாக, அமாவாசை நாளில், முன்னோரை வணங்கும் போது, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் நமஸ்கரிப்பதும் மகத்தான ஆசீர்வாத்தையும் பலன்களையும் தரும்.