பித்ரு தர்ப்பணத்துக்கு உகந்த அமாவாசை !!
அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, `நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள். இதற்குக் குறிப்பிட்ட காரணம் என்று எதுவுமில்லை.
இருப்பினும் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள்.
சந்திரன் விராட புருஷனாகிய பெருமாளின் மனதிலிருந்து தோன்றியவர் என்று வேதம் கூறுகிறது. சந்திரன் சந்தோஷமடைந்தால் மனதும் சந்தோஷம் அடையும். சந்தோஷமான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நல்லபடி வெற்றி பெறும்.
அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம். ஏனென்றால், நாளை முதல் நாம் உலகத்தைப் பார்க்கலாம் என்ற ஆசையும் ஆர்வமும்தான் சந்திரனின் மகிழ்ச்சிக்குக் காரணம்.
சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள், நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும், என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாகச் சொல்லப்பட்டிருக்கிறது.